Friday, April 2, 2010

காவல் கதைகள் 4. கண்ணாயிரம்





‘த்தனை வருசம் ஆச்சு, யூனிபார்ம் போட்டு’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்ட கண்ணாயிரம், தமிழ்நாடு காவல்துறையின் பல தூண்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும், அவனும் ஒரு அங்கம் தான். அவன் இல்லாவிட்டால், தமிழ்நாடு காவல்துறையின் பல பணிகள் முடங்கி விடும் அபாயம் உண்டு. அவன் செய்யும் பணி அப்படி.

ணியில் சேர்ந்து ட்ரெய்னிங் முடித்ததோடு சரி. கண்ணாயிரத்துக்கு, உடம்பு வளைந்து வேலை பார்க்க முடியாது. மாலை 6 மணியானால், கண்ணாயிரத்துக்கு, வீட்டுக்கு போய் விட வேண்டும். போலீஸ் வேலையில் அது முடியுமா ? 24 மணி நேர பணியாயிற்றே அது ? ஆனாலும் கடந்த 20 வருடங்களாக 6 மணிக்கு வீட்டுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறான் கண்ணாயிரம். இது மட்டுமல்ல. சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், முதலமைச்சர் பதக்கம், சுதந்திர தின பொன்விழா ஆண்டுப் பதக்கம், என கண்ணாயிரம் காவல்துறையில் பெறாத பதக்கங்களே கிடையாது.

ண்ணாயிரம் தான் பணியாற்றும் அலுவலகத்துக்கு மாதம் ஒரு முறைதான் செல்வான். அவன் சென்றால் அன்று அவனுக்கு கிடைக்கும் மரியாதை… …. அப்பப்பா…. அப்படி ஒரு ராஜ மரியாதை. அந்த அலுவலகத்தை நிர்வகிக்க, டிஎஸ்பி அட்மின் அதாவது நிர்வாகம் செய்யவென்று ஒரு டிஎஸ்பி இருப்பார். அவரைக் கண்டால் அனைத்து காவலர்கள், தலைமைக் காவலர்களும் நடுங்குவார்கள். பின்னே… அவர்தானே, அனைவருக்கும், ஒரு மணி நேர அனுமதி முதல் விடுப்பு வரை அனைத்தையும் வழங்க வேண்டும். அவர் நினைத்தால், தினமும், ஒருவரை தூத்துக்குடிக்கு தபால் ட்யூட்டியாக அனுப்ப முடியும் அல்லவா. அரசுப் பணத்தில் உடம்பை வளர்த்தவர் என்று பார்த்ததுமே தெரியும் அவர் வந்தாலே, கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் அனைவருக்கும் நடுக்கம். தன் பெரிய வயிறை அசைத்து அசைத்து அவர் வருவதை பார்த்தால், சாதாரண மனிதனுக்கு சிரிப்பு வரும். ஆனால், காவல்துறையில் சேர்ந்தவுடன் தான் நகைச்சுவை உணர்வு, மனிதாபிமானம் எல்லாவற்றையும் விட்டு விடவேண்டுமே .. .. அதனால் காவலர்களுக்கு அவரைப் பார்த்ததும் சிரிப்பு வராது. ஓடி ஒளிந்து கொள்வார்கள். எதற்குத் தெரியுமா ? இந்த ஆள் கண்ணில் பட்டால், ஏதாவது வேலை வைப்பான் என்பதால். அப்படிப் பட்ட டிஎஸ்பியே, கண்ணாயிரத்தை பார்த்தால் உட்கார வைத்துத்தான் பேசுவார். இத்தனைக்கும் கண்ணாயிரம் ஒரு சாதாரண கான்ஸ்டபிள்.

ன்றும் அப்படித்தான் சென்றான் கண்ணாயிரம் அலுவலகத்துக்கு.

“வாப்பா கண்ணாயிரம். நல்லா இருக்கியா“ என்று அவனை வரவேற்று அமரச் சொன்னார் டிஎஸ்பி. “என்ன விஷயம். ஜிபிஎஃப், சரண்டர் ஏதாவது வரணுமா .. ? “ என்று அவனைப் பார்த்து வினவினார். “இல்லீங்கய்யா. டி.ஏ பில்லுல கையெழுத்து போட்டுட்டு போலாம்னு வந்தேன். “

“சரி. போட்டுட்டுப் போ. “ “அம்மா ஏதாவது சொன்னாங்களா ? அவங்களுக்கு ஏதாவது வேணுமா ? “ என்று மிகுந்த அக்கறையோடு கேட்டார். “இல்லங்கய்யா அம்மா ஏதாவது கேட்டால் போன் பண்ணுறேங்கய்யா“ என்று பதில் கூறி விட்டு, எழுந்தான் கண்ணாயிரம்.

வெளியே வந்ததும், அவனோடு பணியாற்றும் மற்ற கான்ஸ்டபிள்கள், மரத்தின் கீழே நின்று பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்போதெல்லாம் கண்ணாயிரம் அவர்களோடு நெருங்கிப் பேசுவதைத் தவிர்த்தான். இப்படித்தான் போன மாதம் கண்ணாயிரம் டி.ஏ பில்லில் கையெழுத்துப் போடுவதற்காக வந்தபோது, “சட்டிக் கழுவறவனுக்கெல்லாம் மெடல். ராப்பகலா வேலப் பாக்குறவனுக்கு பனிஷ்மென்ட்“ என்ற இவன் காது பட அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவுடன் கோபம் வந்து, அவ்வாறு பேசியவனுடன் கண்ணாயிரம் சண்டைக்குப் போய், அவன் சட்டையைப் பிடித்து அடித்து விட்டான். அது பஞ்சாயத்துக்கு டிஎஸ்பி யிடம் சென்றது. டிஎஸ்பி, நியாயமாக விசாரணை நடத்தி, தேவையற்ற முறையில் கண்ணாயிரத்திடம் சண்டை போட்ட அந்த கான்ஸ்டபிளை பணி மாறுதலில் தூத்துக்குடிக்கு அனுப்பினார்.

ந்தக் கான்ஸ்டபிள் கண்ணாயிரத்தைப் பார்த்து கமெண்ட் அடித்ததில் நியாயம் இல்லாமல் இல்லை. கண்ணாயிரம் அப்படி என்னதான் வேலைப் பார்க்கிறான் ?

மிக முக்கியமான வேலை என்று படித்தீர்கள் அல்லவா. ஐஜி வீட்டில், காலை காய்கறி வாங்கித் தருவதில் இருந்து, ஐஜி மனைவியின் ஜாக்கெட்டை தைத்து, அயர்ன் பண்ணிக் கொண்டு வருவதில் இருந்து, அய்யாவின் ஷுவுக்கு பாலீஷ் போடுவதிலிருந்து, அய்யாவின் மகளுக்கு மதிய உணவு கொடுப்பதிலிருந்து, அய்யா வீட்டின் நாயான ‘பைரவை‘ குளிப்பாட்டி வாக்கிங் அழைத்துச் செல்வதில் இருந்து, அனைத்து வேலைகளும் கண்ணாயிரம்தான் செய்வான் என்றால் சும்மாவா ?

ஆனால் அந்தக் கான்ஸ்டபிள் அவ்வாறு கமென்ட் அடித்த போது ஏதோ கோபத்தில் சண்டை போட்டு விட்டானே தவிர, கண்ணாயிரத்துக்கு, ‘இவனுக்கு, அய்யா வீட்டுல வேலை செய்யற சான்ஸ் கிடைக்கலன்னு பொறாமை‘ என்று தானாக சமாதானம் சொல்லிக் கொண்டான்.

னாலும் அந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடுமா என்ன ? தீபாவளி பண்டிகை வந்து விட்டால், அய்யா அவன் வீட்டில் மனைவிக்கும் அவனுக்கும் தவறாமல் புதுத்துணி எடுத்துத் தருவார். மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு அனுப்பி விடுவார். அந்த அம்மாவும் நல்ல மாதிரி. சங்கம் தியேட்டர் எதிரில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள அய்யா வீட்டுக்கு போனவுடன் காலையிலேயே காபி கொடுத்து விடுவார்கள். முதல் மாடியில் உள்ள அந்த வீட்டில் பின் புறம் சென்று, பாத்ரூம் அருகில்தான் அந்தக் காபியைக் குடிக்க வேண்டும் என்றாலும், அதற்காகவெல்லாம் கண்ணாயிரம் வருத்தப் படுவதில்லை. ‘அய்யா வீட்டில் காப்பி குடிப்பதென்றால் சும்மாவா‘

வன் குடியிருக்கும் அந்தக் காவலர் குடியிருப்பிலும், கண்ணாயிரத்துக்கு ஒன்றும் குறையில்லை. எல்லா காவலர்களும் இரவு ட்யூட்டி, ஓய்வில்லாமல் தொடர்ந்து ட்யூட்டி என்று அல்லல் படுவதை பார்த்திருக்கிறான். ஆனாலும், அவனைப் போல மாலை ஆறு மணிக்கெல்லாம் அவர்களால் வீட்டுக்கு வர முடியுமா ?

வீட்டுக்கு வந்ததும், தொட்டிலில் இருக்கும், மிகுந்த தாமதமாக பிறந்த, அவன் மகனை எடுத்து கொஞ்சுவான். காலையில் வந்த தினத்தந்தியை எடுத்து, ஒரு வரி விடாமல் படிப்பான். அவன் மனைவியும், அவன் குணம் அறிந்து, தேவைக்கு அதிகமாக பேச மாட்டாள்.
அன்றும் அப்படித்தான் தினத்தந்தியைப் படித்துக் கொண்டிருந்தான்.

“என்னங்க.. கொழந்தை கத்தறான் பாருங்க.. “

“என்னடி. ஆஞ்சு ஓஞ்சு வீட்டுக்கு வந்தா, உன் தொந்தரவு தாங்க முடியல“

“என்னங்க.. கிச்சன்ல சமையல் வேலையா இருக்கேங்க. “
தொட்டிலை சென்று பார்த்ததில், குழந்தை மலம் கழித்து விட்டு, கத்துவது தெரிந்தது.

“ஏய். ஆயி போயிருக்கான். வந்து கழுவி விடு. “

“ஏங்க… அப்படியே பாத்ரூமுக்கு தூக்கிட்டுப் போய் கழுவிடுங்க. கிச்சன்ல வேலையா இருக்கேன்.“

“ஏண்டி…. இந்த வேலையெல்லாம் என்கிட்ட விடாதன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்“
முணுமுணுத்துக் கொண்டே, சமையலை நிறுத்தி விட்டு, பாத்ரூமுக்கு குழந்தையை எடுத்துச் சென்று கழுவி விட்டு, துணியை மாற்றி விட்டு, மீண்டும் தொட்டிலில் கிடத்தி விட்டு, சமையலை தொடர்ந்தாள்.

இரவு உணவின் போது இருவருமே பேசவில்லை. இருவரும் படுத்ததும், அவள் மீது கையைத் தூக்கிப் போட்டான். போட்டவுடன் நகர்ந்துப் படுத்தாள்.

“புள்ளை ஆயிப் போயிட்டான். போயி கழுவி விடுங்கன்னா, இந்த வேலையெல்லாம் இவரு செய்ய மாட்டாராம். ஆயி போகாத புள்ளை ஒலகத்துல எங்கே இருக்கு“

“எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன்ல….. “ என்று குழைவாக இழுத்தான்.

“புடிக்கலன்னா, இது மட்டும் புடிக்குதா ? பேசாம படுங்க. எரிச்சலக் கௌப்பாதீங்க“ என்று சொல்லி விட்டு அவள் பாட்டுக்கு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

இன்றைக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை என்ற முடிவோடு திரும்பிப் படுத்து உறங்கினான்.

ழக்கம் போல அய்யா வீட்டுக்குச் சென்று காலை காப்பி குடித்தவுடன், பைரவை வாக்கிங் அழைத்துச் சென்றான். மார்க்கெட்டுக்கு சென்று, அய்யாவுக்கு பிடித்த கேரட்டூம், பீட்ரூட்டும் வாங்கிக் கொண்டு அம்மாவிடம் கொடுத்து விட்டு, அயர்ன் பண்ண வேண்டிய துணிகளை எடுத்து தன் அன்றாடப் பணிகளை பார்க்கத் தொடங்கினான்.

மாலை 5.30 மணி ஆனதும், “அம்மா நான் கௌம்பறேம்மா“ என்றான்.

“கண்ணாயிரம். இன்னைக்கு ட்ரைவர் வரலை. அய்யா நைட்டு ஈசிஆர் போலாம்னார். செல்ப் ட்ரைவிங் பண்ணிக்குவார். நீ வண்டிய மட்டும் கழுவி வச்சுட்டுப் போயிடு. அய்யாவுக்கு எல்லாம் நீட்டா இருக்கணும். “

“சரிம்மா“ என்று எவ்வித தயக்கமில்லாமல், பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஏசி பொருத்தியிருந்த அந்த அரசு வண்டியை கழுவச் சென்றான் கண்ணாயிரம்.

வண்டியை உள்ளே கழுவி விட்டு, முன்புறமும் முடித்து விட்டு தண்ணீரை நன்றாக அடித்துக் கழுவினான். கையில் துணியை எடுத்து, பின் டயரை கழுவத் தொடங்கினான். திடீரென துர்நாற்றம். குமட்டியது கண்ணாயிரத்துக்கு. வண்டி கழுவிக் கொண்டிருந்த துணியை வெளியே எடுத்தான். மலம். அதுதான் அந்த துர்நாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


சவுக்கு

8 comments:

Sundararajan P said...

வாழ்த்துகள் நண்பரே.

காவல்துறையின் கருப்புப் பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் துணிச்சலான பணியில் இறங்கி இருக்கிறீர்கள்.

சரளமான மொழிநடையும்,கலை உத்திகளும் இயல்பாக வருகிறது.

இதில் உண்மைகளும், நடைமுறைகளும் பின்தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சவுக்கு said...

அன்பு நண்பரே. உங்கள் ஊக்கம் இல்லாவிடில், இப்பணியில் இறங்கியிருக்க மாட்டேனோ என்று தோன்றுகிறது. இப்படைப்புகள் அனைத்துக்கும் உத்வேகம் நீங்கள்தான். தங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி.

செங்கதிரோன் said...

nice story...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றாக இருக்கிறது, நண்பரே.

Anonymous said...

அருமை

Anonymous said...

தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்
jaani.n@gmail.com

Anonymous said...

தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்
jaani,n@gmail.com

ரோஸ்விக் said...

டிஎஸ்பி, நியாயமாக விசாரணை நடத்தி, தேவையற்ற முறையில் கண்ணாயிரத்திடம் சண்டை போட்ட அந்த கான்ஸ்டபிளை பணி மாறுதலில் தூத்துக்குடிக்கு அனுப்பினார்

super... ellam velivarattum.

Post a Comment

அன்போடு கருத்திட்டு என்னை ஊக்கப் படுத்துங்கள்.