Monday, March 22, 2010

காவல் கதைகள் 3 காயத்ரி





டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, காவல்துறையின் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டென்டாக பணியில் சேர்ந்த போது அவள் அறிந்திருக்கவில்லை, இந்த அலுவலகம், தனது வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறதென்று.

ச்சாரமான பிராமணக் குடும்பம். ஐந்தாவது பெண்ணாக பிறந்தாள் காயத்ரி. அவளின் தோப்பனார் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கெழுதும் வேலை செய்து ஐந்து பெண்கள் கொண்ட தனது குடும்பத்தை நன்றாகவே காப்பாற்றி வந்தார். புதுத் துணி என்றால் தீபாவளிக்கு மட்டும் தான். ஐந்து பெண்களை கரை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து குடும்பத்தை சிக்கனமாகவே நடத்தி வந்தார் சீனிவாசய்யர். ‘கௌசி மாமி என்று அழைக்கப் படும் கௌசல்யாவும் சீனிவாசய்யரின் பொறுப்புக்கு சற்றும் குறையாமலே குடும்பத்தை நடத்தி வந்தாள். மைலாப்பூரில் கீழ் நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில்தான் வீடு. வீட்டு ஓனரும் பிராமணராதலால், இவர்கள் கொடுக்கும் சொற்ப வாடகைக்கு இந்த வீட்டை இவர்களுக்கு குடக்கூலிக்கு விட்டிருந்தார்.




ப்பா, காலேஜுல எல்லாம் டூர் போறாப்பா. வெறும் நூறு ரூபாத்தான் பா. நான் போகலேன்னா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பரிகாசம் பண்ணுவாப்பா“



“நூறு ரூபா ஒண்ணும் சின்ன அமவுண்ட் இல்லேடீ. பரிகாசம் பண்றவா தோப்பனாரெல்லாம் நன்னா சம்பாதிப்பா. நேக்கு அப்படி வருமானம் இல்லையேடீ. அடுத்த முறை போலாம்“ என்ற அப்பாவின் பதிலுக்கு காயத்ரி வேறு என்ன சொல்லி விட முடியும் ? ஆனால் வாழ்வின் உன்னதங்கள் பலவற்றை அனுபவிக்காத ஏக்கம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.

ல்லூரிப் படிப்பு முடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷம் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தொற்றிக் கொண்டது.

டிப்பில் சூட்டிகையான காயத்ரி, பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே துறைத் தேர்வுகள் அனைத்தையும் எழுதி, தேர்ச்சி பெற்று, அடுத்த பதவி உயர்வை பெற்றாள். நன்றாக வேலை செய்வாள் என்ற பெயரை விரைவாகவே பெற்றாள் காயத்ரி. அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் காயத்ரியை, மடியில் வைத்துக் கொஞ்சாதது மட்டும் தான் பாக்கி. “காயத்ரிக்கென்ன ? எந்த வேலையக் கொடுத்தாலும், டாண் டாண்ணு முடிச்சுடுவோ“ என்ற பாராட்டுரைகள் காயத்ரியை மயக்கவே செய்தன. இருபத்து மூன்று வயதில், தாவணி அணிந்த அந்த இளம் பெண்ணைச் சுற்றி மொய்த்த கண்களுக்கு வயதே இல்லை.

வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் காயத்ரிக்கு நல்ல வரனாக பார்க்கும் வேலையை தொடங்கிய சீனிவாசய்யர், காயத்ரியைப் போலவே, மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும், வெங்கட்ராமனை மணம் முடித்தார். வெங்கட்ராமன் வெளி உலகம் தெரியாமல், அடுக்களையைச் சுற்றியே தன் வாழ்க்கையை வளர்த்தவன்.

ன்னா. நாளைக்கு நோக்கு லீவுதானே. வர்றேளா. சினிமாவுக்கு போயிட்டு வரலாம். மாமிக்கிட்ட வேணா நான் கேக்கறேன். “
“அம்மா ரொம்ப ஆச்சாரமானவா டீ. நீ இப்படி போய் சினிமா ட்ராமாக்குப் போகணுன்னு கேட்டா, நம்மாத்து மாட்டுப் பொண்ணு இப்பிடி திமிர் பிடிச்சவளா இருக்காளேன்னுடுவா“ “கோயிலுக்கு வேணா போலாம்“ திருமணமாகி மூன்று மாதங்களில் முன்னூறு தடவை அந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கூட்டிச் சென்றிருப்பான் வெங்கட்ராமன். இவளும் மயிலாப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவள்தானே, இந்த கபாலீஸ்வரர் கோயிலை எத்தனை முறை இவள் பார்த்திருப்பாள் என்ற நினைவே வெங்கட்ராமனுக்கு வரவில்லை.

டுத்த மூன்று ஆண்டுகளில் நடந்த விபத்துக்களில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே, காயத்ரியின் அழகை வரித்துக் கொண்டிருந்தன. குழந்தைகள் காயத்ரியின் அழகை வரித்துக் கொண்டிருந்தாலும், காயத்ரியின் மெருகு குறைந்து விடுமா என்ன ?

னால் மூன்று ஆண்டுகளில் வெங்கட்ராமன் காரணம் எதுவுமே இல்லாமல் காயத்ரியிடமிருந்து விலகிப் போனான். இத்தனை அகலமான கட்டிலை ஏன் செய்தார்கள் என்று காயத்ரி பல முறை வருத்தப் பட்டிருக்கிறாள். கட்டில் சிறிதாக இருந்தாலும், கட்டியவன் சரியாக இருக்க வேண்டுமல்லவா ?
“ஏன்னா“

“ம்“

“ஏன்னா“

“என்னடீ ? “

“நான் நன்னாருக்கேனா ? “‘

“தூங்கிண்டிருக்கவாள எழுப்பிக் கேக்கற கேள்வியாடீ இது ? “

“என் கிட்ட வாங்கோளேன். “




“நாளைக்கி ஆபீஸ்ல ஆடிட் இருக்குடீ. தொந்தரவு பண்ணாமே தூங்கு“
நாளைக்குத்தான் ஆடிட். இத்தனை நாள் என்ன ? என்ற கேள்வி, உடல் வெப்பத்தோடு, அடங்கியது. கண்ணோரம் வழிந்த கண்ணீரை தலையணையில் துடைத்து விட்டு உறங்கினாள்.

மே“டம், நாளைக்கு புது எஸ்.பி ஜாயின் பண்றார்.“ என்று எஸ்பியின் வெயிட்டிங் பிசி வந்து சொன்னான்.
“நாளைக்குத் தானே பண்றார். இப்போ என்ன வேலை செய்ய விடுங்கோ“ என்ற பதிலளித்து விட்டு, அன்றைக்கு முடிக்க வேண்டிய பில்களை தயாரிக்கத் தொடங்கினாள்.

ஆம் ந்யூ டு திஸ் ப்ளேஸ்“ என்று தன்னை சந்திக்க வந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புதிய ஐபிஎஸ் அதிகாரி இளமையாகவே இருந்தான். நல்ல உயரம். அந்த யூனிபார்ம் கச்சிதமாக அவனுக்குப் பொருந்தியிருந்தது.

“ஐ வான்ட் யூ ஆல் டு கிவ் யுவர் கோஆப்பரேஷன்“ என்று அவன் பேசி முடித்து அமர்ந்த போது, இந்த அதிகாரி தமிழன்தானே…. …. எதற்கு எல்லா அதிகாரிகளும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று எழுந்த கேள்விக்கு, அது சரி. ஆங்கிலத்தில் பேசினால்தானே அவன் அதிகாரி என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் காயத்ரி. ஆனாலும் ஆள் நன்னாத்தான் இருக்கான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சீட்டுக்கு போனாள்.

பிறகு அந்த அலுவலகத்தில் முக்கியமான சீட் பார்த்து வந்ததால், அடிக்கடி அந்த அதிகாரியின் அறைக்கு செல்ல வேண்டி வந்தது.



காயத்ரி. நல்லா வொர்க் பண்றீங்க. கவர்மெண்ட் ஆஃபீஸ்ல மத்த ஸ்டாப் மாதிரி நீங்க இல்ல. யு ஆர் ரியல்லி, வெரி குட்“ என்று அவன் சொல்லியபோது, அவளையறியாமல் உடல் சிலிர்த்தது.

“ஹவ் மெனி சில்ட்ரென் யூ ஹேவ் ? “

“டூ டாட்டர்ஸ் சார்“

“வாஆஆவ். யூ டோன்ட் லுக் லைக் தட்“ “ஐ வில் சே யு ஆர் நைன்டீன்“. ஹவ் ஓல்ட் ஆர் யு“ என்று அவன் கேட்டதற்கு, “ஐம் ட்வெண்டி நைன் சார்“ என்று குழைந்து அவள் சொன்ன பதிலில் அவளின் சம்மதம் இருந்ததாக உணர்ந்தான்.

வாசலில் இருக்கும் கான்ஸ்டபிளை அழைக்கும் அழைப்பு மணியை அழுத்தினான்.

“அய்யா“

“ராமனாதன். மேடம் கூட, ஒரு முக்கியமான பைல் டிஸ்கஷன் இருக்கு. நோ விசிட்டர்ஸ் அன்ட் நோ கால்ஸ். புரியுதா ? “ என்று அவன் கேட்டதற்கு கான்ஸ்டபிள், “நல்லதுங்கய்யா“ என்று தமிழில்தான் பதிலளித்தான். அவன் அதிகாரி அல்லவே ?

ரம்பத்தில் பரபரப்பாக இருந்த காயத்ரியும், அந்த அதிகாரியும் நெருக்கம் என்ற வதந்தி, இரண்டு ஆண்டுகளில், பழகிப் போன பழைய செய்தியானது மட்டுமல்ல, அந்த அதிகாரியிடம் காரியம் ஆக வேண்டும் என்பவர்கள் காயத்ரியை அணுகுவதும் வாடிக்கையாகிப் போனது.
அவன் மாறுதலில் சென்ற போது காயத்ரிக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு அளவே இல்லை. இத்தோடு நம்மை மறந்து விடுவான் என்றுதான் நினைத்திருந்தாள்.

னால், ஒரு மாதம் கழித்து, சிவப்பு விளக்கை தலையில் சுழல விட்டபடி, ஒய்யாரமாக ஒரு கார் அலுவலகத்தில் வந்து நின்றதும், அந்த கார் காயத்ரியை ஏற்றிக் கொண்டு அவனின் புதிய அலுவலகத்துக்குச் சென்றதும், அவனின் புதிய அலுவலகத்தில் காயத்ரியின் மரியாதையை பல மடங்கு கூட்டியது. “அய்யாவோட கார்லே வர்றாங்கன்னா, அய்யாவுக்கு நெருக்கமாத்தான் இருக்கணும்“ என்று ஊகித்துக் கொண்டு, எதற்கும் இருக்கட்டும் என்று அய்யாவின் ட்ரைவரிடம் இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி என எல்லோரும் விசாரித்தார்கள். நெருக்கம் இல்லை என்று சொன்னால், எவனும் மதிக்க மாட்டான் என்பதை உணர்ந்த ட்ரைவர், ரொம்ப நெருக்கம் என்று சொல்லி வைத்தான்.

காயத்ரி, நான் உங்க வீட்டுக்கு வர்றேன். எப்போ கூட்டிட்டுப் போற“

“எங்க ஆத்துக்கெல்லாம் நீங்க வருவேளா… … பெரிய ஆபீசர் நீங்க… நான் என்ன உங்கள மாதிரி ஆபீசரா ? “

“ஆபிசரையே மடக்கிப் போட்ட நீ என்னை விட பெரிய ஆபீசர் இல்லையா “ என்று கேட்டு விட்டு “ஹாஹ்ஹா“ என்று தனது ஹேஷ்யத்தை தானே ரசித்தான். “நீங்க வர்றேள்னு சொன்னா இப்போவே கூட்டிட்டுப் போறேன். “

“ஏன்னா. நம்ப ஆத்துக்கு யார் வந்துருக்கா பாருங்கோ“ என்று அவனை அமரச் சொல்லி விட்டு, வெங்கட்ராமனை அழைத்ததும், வெங்கட்ராமன் கண்களில் வியப்புத் தெரிந்தது.

“சார். இதுதான் என் ஹஸ்பென்ட். வெங்கட்ராமன். “ என்று அவனை அறிமுகப்படுத்தியபோது, நின்ற இடத்திலிருந்தே கையை மட்டும் எக்கி நீட்டினான். கிட்டே சென்று கை கொடுத்தால் மரியாதைக் குறைவு என்று வெங்கட்ராமனுக்கு யார் சொன்னது ?

“ஓ.. வெரி நைஸ் டு மீட் யு. யூ ஆர் வெரி லக்கி டு ஹேவ் சச் ய ப்யூட்டிபுல் வைப் “ என்று அவன் சொன்னபோது, காயத்ரியை விட, வெங்கட்ராமனின் வெட்கம் அதிகமாக இருந்தது. “காக்கி உடுப்பு போட்ருக்க இவ்ளோ பெரிய அதிகாரி, நம்ம ஒய்ப் அழகா இருக்கான்னு சொன்னா, எவ்ளோ பாக்கியம் “ என்று மனதிற்குள், நினைத்துக் கொண்டு, “செத்த இருங்கோ. நன்னா பில்டர் காப்பி போட்டு எடுத்துண்டு வர்றேன். காப்பி சாப்பிடுவேளோன்னோ “ என்று கேட்டு விட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல் கிச்சனுக்குள் சென்றான்.

இதற்குள் அந்த ஃப்ளாட்டில் இருந்த பக்கத்து வீட்டுக் காரர்கள் அனைவரும், வாசலில் கூடினர். “மாமீ…. மாமீ….“ என்ற குரல் கேட்டு, கதவைத் திறந்த காயத்ரிக்கு, நான்கைந்து பக்கத்து வீட்டுக் காரர்கள் வாசலில் நிற்பதைப் பார்த்ததும் என்னவாக இருக்கும் என்று சந்தேகத்தோடே கதவைத் திறந்தாள். “மாமீ. உங்க ஆத்துக்கு பெரிய ஆபீசர் வந்துருக்காளாமே… நாங்களும் செத்த பாத்துட்டு போயிடுறோமே… “ என்று அவர்கள் கேட்டதும், காயத்ரிக்கு வந்த பெருமை விவரிக்க முடியாதது.

“உள்ளே வாங்கோ“ என்று அவர்களை அழைத்து அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
புதிதாக செல்போன் அறிமுகமானபோது, காயத்ரிக்கு செல்போன் ஒன்றை பரிசளித்தான். “நீ எப்பவும் என் கூடவே இருக்கனும்“ என்று அவன் கூறியது, அந்த வயதிலும் பூரிப்பை ஏற்படுத்தியது.
கால ஓட்டத்தில், தமிழ் நாடு முழுக்க, அந்த அதிகாரி பைலில் கையெழுத்துப் போட வேண்டும் என்றால் காயத்ரியின் கண்ணசைவு வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது. காவல்துறையில் சேவையை விட தேவைகள்தானே அதிகம். தேவைகள் அதிகமானவர்கள், தங்கள் தேவைக்காக, காயத்ரியை பார்க்க வரும் முன், நகைக்கடைக்கு சென்று வருவதும், அவர்களிடம், “பிரின்ஸ் ஜுவல்லரில்ல புது டிசைன் வந்திருக்காமே“ என்று இவள் கேட்பதும் இயல்பான விஷயமாகிப் போனது.

மீண்டும் அவன் அவள் பணியாற்றும் அலுவலகத்துக்கே மாறுதலில் வந்த போது, காயத்ரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “இனிமே நான்தான் டிஜிபி“ என்று வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தாள்.

டிஜிபி எங்க வீட்டுக்கு நேத்து வந்தார் என்று அலுவலகத்தில் சொல்லிக் கொண்டால், தன்னுடைய மதிப்பு கூடும் என்று காயத்ரிக்கு யார் சொல்லிக் கொடுத்தது ?

“ஆத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சே. இன்னைக்கு வர்றேளா ? “

“ ஈவ்னிங் ஹோம் செக்ரட்டரியப் பாக்கணும். ஓக்கே. டு ஹெல் வித் இட். ஐ வில் டெல் ஹர் தட் ஐ வில் கம் டுமாரோ“ ஐ வில் கம்“ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இதை நாளை அலுவலகத்தில் வந்து அனைவருக்கும் எப்படி விவரிப்பது என்று அவள் கற்பனை ஓடியது.

வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்து, அவனை உள்ளே அனுப்பி விட்டு, இவளாகவே, வலியச் சென்று, எதிர் வீட்டு கதவை தட்டி, “மாமீ. எங்க ஆத்துக்கு டிஜிபி வந்திருக்கார். செத்த நேரம் கழிச்ச வாங்கோ. நான் அவருக்கு காபி கொடுத்துட்றேன். “ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, அவள் மூத்த மகள், டைட்டாக டீ ஷர்ட் அணிந்து கொண்டு, வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“ஏய். கம் ஹியர். டிஜிபி வந்திருக்கார் பாரு“ என்று சொல்லியதை, அலட்சியமாக கேட்டவாறே அருகில் வந்தாள் அவள் மகள் சுபா.

ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவள் மகளைப் பார்க்கிறான்.
“மம்மி. ஷாப்பிங் போறேன். டின்னர் வெளியே சாப்டுர்றேன். டோன்ட் வெயிட் ஃபார் மி“ என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எதேச்சையாக அவனைத் திரும்பிப் பார்த்தவள், தன் மகள் மார்பை முறைத்துப் பார்த்தக் கொண்டிருப்பதை கண்டாள்.

மகள் வெளியே சென்றவுடன் அவன் சொன்னான். “யுவர் டாட்டர் ஈஸ் வெரி ப்யூட்டிஃபுல்“


சவுக்கு

Saturday, March 20, 2010

காவல் கதைகள் 2 என்கவுன்ட்டர்




சங்கிய அழுக்கேறிய சட்டை. பரிதாபமான தோற்றத்தோடு ஆட்டுக்கால் சூப் விற்றுக் கொண்டிருந்தவரின் அருகே சூப் குடித்துக் கொண்டு கூட்டம் நிற்கத்தான் செய்தது. அவரின் தோற்றம் அழுக்காய் இருந்தாலும், அவர் விற்கும் சூப் சுவை குறைந்து விடுமா என்ன ?

நான்கு சக்கரங்கள் பொருத்திய வண்டிக் கடையில் சூப் வியாபாரம் செய்து கொண்டிருந்த முனியாண்டிக்கு வயது அறுபது இருக்கும். முகத்தில் முதுமையின் சாயல்கள் நன்றாகவே தெரிந்தன. இருபது வருடங்களாக அன்றாட உணவுக்காகவே போராட்டம் நடத்திய களைப்பு அவரின் தோற்றத்தில் தெரிந்தது.

‘என்ன பெரிதாக வந்து விடப்போகிறது சூப் விற்பதில் லாபம் ?’ ஆனால் முனியாண்டிக்கு வேறு தொழில்கள் செய்து பழக்கமில்லை. சுவையான சூப் கிடைக்கும் என்ற பெயர் பரவி விட்டதால் இவர் கடையை தேடி வந்து சூப் சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆனாலும் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்க பெரிதாக வருமானமில்லை.


சூப் குடிக்க வருபவர்களின் உறவு, முனியாண்டியிடம் சூப்புக்கு காசு கொடுப்பதோடு முடிந்து விடும் அல்லவா ? வேறு என்ன உறவு இருக்க முடியும் ? அவருக்கு பொருளாதார உதவி செய்து அவரது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அவரவர் வாழ்க்கையை போராட்டமாக இருக்கும் போது, சூப் விற்பவனின் வாழ்க்கையை பற்றி யோசிக்க யாருக்கு நேரம் இருக்கிறது.


“அய்யா நம்ம பாண்டிய போலீஸ் சுட்டுக் கொன்னுடுச்சுய்யா“ என்று அலறியபடி வெங்கடேசன் ஓடி வந்ததைப் பார்த்து முனியண்டிக்கு நெஞ்சில் கடப்பாறையை இறக்கியது போல இருந்தது. தடுமாறி விழப் போனவரை அருகே சூப் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர்.


ய்யா வேணான்டா. சொல்றதக் கேளுடா. ஒன் வாழ்க்கையே தெச மாறிப் போயிடுண்டா“ என்று பாண்டியிடம் முனியாண்டி மன்றாடியபோது, 25 வயதுப் பாண்டி “வாய மூடுப்பா. போலீஸ் என்னவோ கண்டுபிடிச்சு மயிறப் புடுங்கிடுவாங்கன்ன…“ “இப்ப பாத்தியா ? இன்னையோட இருபது நாளாகுது. தெனாவட்டா ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுங்க. என்னப் பாத்து பொட்டப் பயன்னு நெனைக்க மாட்டான் ? “

இந்த காரசார விவாதத்தின் பின்னணி, பாண்டியின் தம்பி, முனியாண்டியின் இளைய மகனின் மரணம். பாண்டியின் தம்பி முருகன், ஒரு சில்லரைத் தகராறில் 35 இடங்களில் வெட்டுப் பட்டு சாலை முழுக்க தன் ரத்தத்தை சிதற விட்டுப் பிணமானான்.

கொலைகாரர்களை போலீஸ் கைது செய்யாமல் உலவ விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆத்திரத்தில்தான் முனியாண்டியிடம் வாதம் செய்து கொண்டிருந்தான் பாண்டி.


“அவனுங்கள பழிக்குப் பழி வாங்குனாத்தான் என் மனசு ஆறும்ப்பா. நான் சும்மா விடமாட்டேன். “ என்று கறுவியபடி வெளியே சென்றான் பாண்டி. ஓரு பத்து நாள் போனா சரியாயிடும் என்று மனதிற்குள் முனகிக் கொண்டே, மாலை சூப் கடை வைப்பதற்கான ஆயத்தங்களில் இறங்கினார் முனியாண்டி.


ரண்டு நாட்களில் தன் மகன் பாண்டி, இளைய மகனின் கொலைக்கு காரணமான இரண்டு பேரை சந்தையில் வைத்து கொலை செய்தான் என்ற செய்தி முனியாண்டியை மனம் உடைந்து போகச் செய்தது. அத்தோடு, பாண்டியின் உறவை முறித்துக் கொண்டு, அவனோடு பேசுவதை நிறுத்தி விட்டார் முனியாண்டி.


குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டு, சேலம் சிறையில் இருந்த பாண்டிக்கு சிறைக்குள் நட்பு வட்டாரம் பெருகியது. “அண்ணே, வெளியப் போனதும், இந்த சம்பவத்த செஞ்சு குடுங்கன்னே. தலைவரு நல்லா கவனிச்சுக்கிடுவாரு. “ என்று அடுத்த கொலைக்கான அச்சாரம் கிடைத்த போது, இயல்பாக ஏற்றுக் கொண்டான் பாண்டி.




பணம் கொட்டியது. பெரிய மனிதர்களின் சகவாசம் கிடைத்தது. புதிதாக சுமோ ஒன்று வாங்கினான். வெளியே எங்கு சென்றாலும் பத்து பேர் இல்லாமல் செல்வதில்லை. சுமோ சீட்டுக்கு கீழே பத்து இருபது வீச்சரிவாள்கள் இருக்கும். சிறையில் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து, புதிதாக கைத்துப்பாக்கி ஒன்று வாங்கினான். போலீஸ் அதிகாரிகள் ரகசியமாக பேசத் தொடங்கினர்.

“பாண்டி. அய்யா வீட்டுல பங்ஷன் வச்சுருக்காரு. பாத்து கவனிச்சுக்கிட்டன்னா, பின்னாடி யூஸ் ஆகும்“ என்று தல்லாக்குளம் ரைட்டர் வந்து சொன்னபோது, அருகில் இருந்த எடுபிடியை அழைத்து, ரெண்டு லட்ச ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.
பாண்டி வற்றாத அமுத சுரபியானான்.

ழுத்தில் 8 பவுனக்கு தங்கச் சங்கிலி. பாண்டியின் சுமோ வந்தால் என்னமோ ஏதோ என்று மதுரை மக்கள் அலறுகிற அளவுக்கு பிரபலமானான். மதுரை தாண்டி, தமிழகம் முழுவதும் பாண்டியின் புகழ் பரவியது. இரண்டு ஸ்கார்ப்பியோக்கள், நான்கு சுமோக்கள் என்று பெரிய பணக்காரனைப் போல பாண்டி வலம் வந்தாலும், முனியாண்டி தள்ளு வண்டியில் சூப்தான் விற்றுக் கொண்டிருந்தார். தன் பேச்சைக் கேட்காக மகனிடம் பேச மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம்.


“அண்ணே வக்கீல் லயன்ல இருக்காருன்னே. “


“எந்த வக்கீல்டா“

“நம்ம சேகர் சாருன்னே“

“குடு“

“என்ன பாண்டி நல்லா இருக்கியா ? “ என்று நலம் விசாரித்த சேகர், பிரபலமான வக்கீல். பெரிய தலைவர்களுக் கெல்லாம் வக்கீலாக இருப்பவர்.

“நல்லா இருக்கேன்னே. நீங்க நல்லா இருக்கீங்களா ? “

“இருக்கேன். இருக்கேன். ஒரு சம்பவம் செய்யணுமே ! “

“சின்னதா பெரிசாண்ணே ? “

“ஒனக்கு எது பெருசு ? நீ நெனச்சா எல்லாம் சின்னதுதான். “

“சொல்லுங்கண்ணே. “

“ கே.கே.நகர்ல ஒருத்தன் இருக்கான். குமார்னு பேரு. எதுக்கும் மசிஞ்சு வர மாட்டேங்குறான். தலைவரையே எதுத்துப் பேசிட்டான்னா பாரேன்.“

“மெறட்டிப் பாக்கட்டான்னே ? “

“அதெல்லாம் ஒத்து வர மாட்டான் பாண்டி. சம்பவம் செஞ்சடுன்னு நான் சொல்றேன்னா, காரணம் இல்லாமயா இருக்கும் ? ஐஞ்சு ரூபா கொடுத்துடுறேன். யாராவது பசங்கள அனுப்பு. இன்னைக்கே அனுப்பு“


“சரிண்ணே“


கே.கே.நகரில் பட்டப் பகலில், அந்தப் படுகொலை நடந்த போது, நகரமே ஆடித்தான் போனது. அந்தக் குமார் நடு வீதியில் இறந்து கிடந்ததைப் பார்ப்பது யாராக இருந்தாலும் பயத்தை கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கொலை நடந்தது.




காலப் போக்கில் வக்கீல் சேகருக்காக மட்டும் ஐந்து கொலைகள் செய்தான் பாண்டி. போலீசின் தேடுதல் வேட்டை தீவிரமாகவும், சிறிது நாட்கள் ஆந்திராவுக்குச் சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே, சேகரிடமிருந்து அழைப்பு.


“பாண்டி… என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம்“


“இல்லண்ணே. போலீஸ் டார்ச்சர் தாங்க முடியலே. அதான் ஆந்திராவுக்குப் போய் ரெண்டு மாசம் இருந்தேன். “

“பாண்டி, அயனாவரத்துல ஒரு சம்பவம் செய்யணும். “

“அண்ணே. போலீஸ் டார்ச்சர் ரொம்ப அதிகமாயி டுச்சுண்ணே. கொஞ்ச நாள் அப்ஸ்காண்டிங்ல இருக்கலாம்ணு பாக்கறேன். ஒரு ஆறு மாசம் போகட்டும்ணே. “ என்றதை சேகர் ஏற்கவில்லை.

“என்னா பாண்டி. இருவது வருஷமா ஃபீல்டுல இருக்க. நீயே இப்படி சொன்னா எப்படி ? அவசரம்னு தானே ஒங்கிட்டே வர்றேன்“

“இல்லண்ணே. சூடு கொஞ்சம் தணியட்டும். யாரோ புது டிஜிபி போட்ருக்காங்கள்லாம். ரொம்ப ஸ்டிட்டாமே ? “


“பாண்டி. நாந்தான் பாத்துக்கறேன்றேன்ல. எதுக்கு கவலப் பட்ற ? “

“இல்லண்ணே. கொஞ்ச நாள் போகட்டுண்ணே. அப்பொறம் நானே சம்பவம் செஞ்ச குடுக்கறேன். “ என்று சொல்லி விட்டு, லைனில் காத்திருக்காமல் பாண்டி போனை கட் பண்ணியது சேகரை ரொம்பவே ஆத்திரப் படுத்தியது.


ரவுடிப்பய… …. என்ன திமிரு இவனுக்கு என்று மனதிற்குள் கறுவினார் சேகர்.


பாண்டியின் இருப்பிடம் பற்றி கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அநாமதேய அழைப்பை


அடுத்து, பாண்டி தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தது போலீஸ்.
மதுரையில் பிடிக்கப் பட்ட பாண்டியும், அவன் கூட்டாளியும் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

யோவ் நந்தகோபால். எங்கய்யா இருக்க ? “ என்ற உயர் அதிகாரியின் குரலைக் கேட்டதும் விறைப்படைந்தார் இன்ஸ்பெக்டர் நந்தகோபால்.

“சார். ரவுண்ட்ஸ்ல இருக்கேன் சார். “

“சரி. பாண்டிய செக்யூர் பண்ணி க்யூ ப்ரான்ச் சேப் ஹவுஸ்ல வச்சிருக்காங்க. யூ டேக் ய டீம் வித் யூ. டேக் கஸ்டடி ஆப் ஹிம் அன்ட் பினிஷ் ஹிம். டோன்ட் லீவ் எனி ட்ரேசஸ் அன்ட் தேர் ஷுட் நாட் பி எனி மிஸ்டேக்ஸ். யூ அண்டர்ஸ்டேன்ட் ? “ என்றதற்கு “எஸ் சார். வெரி வெல் சார்“ என்ற பதிலளித்து விட்டு, உயர் அதிகாரி இணைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்தார் நந்தகோபால்.

ழைய மகாபலிபுரம் சாலையில், சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆளரவமற்ற தனிமையான பங்களாவுக்கு, தன்னுடன் ஒரு எஸ் ஐயும், இரண்டு ஏட்டுக்களையும் அழைத்துக் கொண்டு எங்கே என்று சொல்லாமல் புத்தம் புதிய பொலீரோ ஜீப்பில் கிளம்பினார் நந்தகோபால். மறக்காமல் பிஸ்டலை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார்.

இரவு 12 மணியைத் தாண்டியிருந்ததால் ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஏற்கனவே அந்த பங்களா வாசலில் வேறோரு ஜீப் நின்று கொண்டிருந்தது.


பங்களா வாசலில், இடுப்பில் பிஸ்டலை மறைத்து வைத்திருந்த சபாரி அணிந்த ஒருவர், நந்தகோபாலைப் பார்த்ததும் விறைப்பாக சல்யூட் அடித்தார்.


“சார். சிசிபிலேர்ந்து இன்ஸ்பெக்டர் அஷோக்கும், அவரோட டீமும் வந்துருக்காங்க சார். அக்யூஸ்ட் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கான் சார் என்ற அந்தக் காவலரின் பேச்சுக்கு தலையசைத்தபடி முதல் மாடி ஏறினார் நந்தகோபால்.

கால்களில் சங்கிலி போட்டு ஜன்னல் கம்பியோடு இணைக்கப் பட்டு தரையில் உட்கார்ந்திருந்தான் பாண்டி. இவனா இவ்ளோ பெரிய ரவுடி என்று மனதிற்குள் ஏற்பட்ட எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அவன் செயின ரிலீஸ் பண்ணுங்கைய்யா“ என்று யார் என்று குறிப்பிடாமல் பொதுவாகச் சொன்னதை தங்களிடமே சொன்னது போல பாவித்து, மூன்று கான்ஸ்டபிள்கள் வேகமாக ஓடி, பாண்டியை ஜன்னலோடு பிணைத்திருந்த சங்கிலியை மட்டும் அவிழ்த்து, அந்தச் சங்கிலியின் இன்னொரு முனையை கையில் பிடித்துக் கொண்டார்கள். பாண்டியின் கைகள் பின்னால் கைவிலங்கிடப் பட்டன. பாண்டியோடு கூட இருந்தவனும், அதே போல கட்டப் பட்டான். பாண்டியும் அவன் கூட்டாளியும் பொலீரோ ஜீப்பின் பின்புறம் தரையில் உட்காரவைக்கப் பட்டனர்.


“சார் ரிமாண்டா சார்“ என்று பாண்டி கேட்டதை நந்தகோபால் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. நள்ளிரவில் ஜீப்பில் அழைத்து செல்வதைக் கண்டதும் பாண்டிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.


“சார். என்கவுன்டரா சார். ரிமாண்ட் பண்ணிடுங்க சார். குண்டாஸ் கூட போடுங்க சார். என்கவுன்டர் வேண்டாம் சார். ரெண்டு பொண்டாட்டி சார் எனக்கு. கெஞ்சிக் கேக்கிறேன் சார்.“ என்ற பாண்டியின் எந்த புலம்பல்களையும், நந்தகோபால் காதில் விழாதது போல அமைதியாக இருந்தார்.

பாண்டி கூட இருந்தவன் “அய்யோ சார் விட்டுடுங்க சார்“ என்று கத்த ஆரம்பித்தான். பிஸ்டலை எடுத்து அவன் நெற்றிப் பொட்டில் வைத்த நந்தகோபால் “சத்தம் வந்துச்சு, இங்கேயே சுட்டுடுவேன்“ என்று கூறியதற்குப் பிறகு, மூச்சு சத்தம் கூட வரவில்லை.

ளரவமற்ற குறுக்கு சாலையில் வண்டி நிறுத்தப் பட்டது. “எறக்குங்கய்யா அவங்க ரெண்டு பேரையும்“ என்ற உத்தரவைக் கேட்டதும், ஜீப்பின் பின் கதவு திறக்கப் பட்டு, இரண்டு பேரும் இறக்கப் பட்டனர். ஜீப் என்ஜின் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.

ஜீப்பின் லைட் வெளிச்சத்திற்கு இரண்டு பேரும் அழைத்து வரப்பட்டனர். “அய்யா. தயவு செஞ்சு விட்டுடுங்கய்யா. அய்யா கெஞ்சிக் கேக்குறோம்யா.. விட்டுடுங்கய்யா “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிஸ்டலை எடுத்து இரண்டு பேரின் நெஞ்சிலும் சுட்டார் நந்தகோபால்.


ருவரின் உடலையும் பொலீரோ ஜீப்பில் ஏற்றி, கிழக்கு கடற்கரைச் சாலைக்கு நந்தகோபால் சென்ற போது, அங்கே, சிசிபி இன்ஸ்பெக்டர் ஒரு புதிய ஸ்கார்ப்பியோ ஜீப்பை, பாதி சாலை மீதும், பாதி சாலையை விட்டு இறக்கியும் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“என்ன சார் முடிஞ்சுதா ? “

“ம். ஓவர். பாடிய எந்தப் பொசிஷன்ல வைக்கலாம் ? “

“சார். ஸ்கார்ப்பியோ லேர்ந்து, ஒரு டென் ஃபீட் தள்ளி வைக்கலாம் சார். அப்போதான் அட்டாக் பண்ணிட்டு ஓடுன மாதிரி இருக்கும்“

“ஆல்ரைட். அப்படியே பண்ணிடுங்க. கமிஷனருக்கும் கண்ட்ரோல் ரூமுக்கும் நான் இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்“ என்று செல்போனை எடுத்தபடி ஓரமாகச் சென்றார் நந்தகோபால்.

பாண்டியின் உடலையும், அவன் கூட்டாளியின் உடலையும், ஓடிப் போய் விழுந்தது போல உத்தேசமான ஒரு வாகில் கிடத்தி விட்டு, நந்தகோபால் அருகில் சென்று “சான் எவ்ரிதிங் ஓவர் சார்“ என்று கூறினார் சிசிபி இன்ஸ்பெக்டர்.

“குட் வொர்க்“

“சார். கேலன்ட்ரி மெடல் இல்லேன்னா ஆக்சலரேட்டட் ப்ரோமோஷன் கெடைக்குமா சார்“

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேன்னா கெடைக்கும். இந்த ஹ்யூமன் ரைட்ஸ் தேவடியாப் பசங்க ஏதாவது கூப்பாடு போட்டுகிட்டு இருப்பானுங்க. அதான் பிரச்சினை. இல்லேன்னா கமிஷனரே, ஹோம் செக்ரட்ரிகிட்ட பேசி வாங்கித் தந்திடுவாரு“

“பிரபல ரவுடி சுட்டுக் கொலை. கூட்டாளியுடன் போலீசைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சிக்கையில் என்கவுன்டிரில் கொலை“ என்று தலைப்புச் செய்திகள் அலறின. சம்பவ இடத்தை பார்வையிட்ட கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போத் ஆர் நொட்டோரியஸ் ரவ்டீஸ். அவங்க ரெண்டு பேரும், வச்சிருந்து துப்பாக்கிய எடுத்து ஃபயர் பண்ண ட்ரை பண்ணாங்க. நம்ப காப்ஸ் செல்ப் டிஃபென்ஸ்ல சுட்டதுல, போத் டைட்“

ப்ரெஸ் மீட் முடிந்ததும் கிடைக்கப் போகும் கவரை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு நிருபர் “சார் ரெண்டு பேர் மேலயும் எத்தனை கேஸ் இருந்துச்சு“ என்று கேட்டதற்கு, “போத் வேர் வெரி டேஞ்சரஸ். தே ஹேவ் மோர் தன் 20 கேசஸ்“ என்று கூறி விட்டு, ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.


பாண்டி இறந்ததிலிருந்து ஒரு வாரம் சூப் கடை போடவில்லை முனியாண்டி. வீட்டில் சோகம் வெளியேறாமல் சுவர்களெங்கும் ஒட்டிக் கொண்டிருந்தது. உதவி கமிஷனர் முராரி அழைப்பதாக ஒரு போலீஸ்காரர் முனியாண்டியை காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.
முனியாண்டியை எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார் முராரி.


“இந்தா பாருங்க பெரியவரே. நாளைக்கு ஆர்டிஓ விசாரணை இருக்கு. பத்மான்னு ஒரு
ஆர்டிஓ உங்கள விசாரிப்பாங்க. அங்க போய் கண்டதையெல்லாம் பேசக் கூடாது என்ன ?. பாண்டி சாகும்போது அவன் கழுத்துல 8 பவுன் செயின் இருந்துச்சு. அத குடுத்துர்றேன். “

“அப்புறம் பாண்டி வச்சுருந்த ஒரு வீட்ட நாங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி சீஸ் பண்ணோம். அதுல இருக்க பொருள்லாம் எடுத்துக்கங்க. புரியுதா ? ஆர்டிஓ அம்மா என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கணும்“ என்று முனியாண்டியிடம் கூறியது அறிவுரையா, மிரட்டலா என்று முனியாண்டிக்குப் புரியவில்லை.


“மவனே போயிட்டான். அப்பொறம் என்னங்கய்யா ? “ என்று அவருக்கு பதிலளித்து விட்டு, முராரிக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார் முனியாண்டி.



காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, பாண்டியும், அவன் கூட்டாளியும் ஒரு ஸ்கார்ப்பியோ ஜீப்பில் வேகமாக வந்தனர். காவல் ஆய்வாளர் நந்தகோபாலும், காவல் ஆய்வாளர் அஷோக்கும், பாண்டியின் வாகனத்தை நிறுத்த முயற்சி மேற்கொண்ட போது, நிற்காமல் செல்ல பாண்டி முயற்சித்ததால், குறுக்கே புகுந்து காவல் துறை அதிகாரிகள் தடுத்த போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாண்டி சுட முயற்சிக்கையில், ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்பட்டு, தன்னுடைய கைத்துப்பாக்கியால் இருவரையும் தற்காப்புக்காக சுட்டதில், இருவரும் மரணமடைந்தனர். ஆய்வாளர் நந்தகோபால் சமயோசிதமாக செயல்படாவிட்டால், அங்கே இருந்த காவல் அதிகாரிகளுக்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் திறமையாக செயல்பட்டு இரண்டு பயங்கர குற்றவாளிகளை தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற, ஆய்வாளர் நந்தகோபால் மற்றும் ஆய்வாளர் அஷோக் மற்றும் அவர்களுடன் இருந்த அனைத்து காவல் துறையினருக்கும், குடியரசுத் தலைவரின் வீரதீரச் செயலுக்கான விருதும், ஒரு படி பதவி உயர்வும் வழங்க பரிந்துரை செய்யப் படுகிறது“ என்று தனது அறிக்கையை அரசுக்கு அளித்தார் ஆர்டிஓ பத்மா.
சவுக்கு


Monday, March 15, 2010

காவல் கதைகள்.


காவல் கதைகள் என்று தொடர் சிறுகதைகள் எழுதலாம் என்று உத்தேசித்துள்ளேன்.

காதல் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இது என்ன புதிதாக காவல் கதைகள் ?

தமிழ்நாடு காவல்துறையில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் இந்தக் கதைகள் வெளியே வருவதேயில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் அனைவரையும் எதிரியாகவே பார்ப்பதாலா, அல்லது காவல்துறையினரோடு, உள்ளன்போடு யாரும் பழகாததாலா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.


ஆனாலும் இந்தக் கதைகள் எழுத தூண்டவே செய்கின்றன. என் பாதையில் குறுக்கிட்ட பாத்திரங்களை உங்கள் முன் படைக்கிறேன்.

இனி முதல் கதை.

கவர்மெண்ட் காசு

ணிமுத்தாறு போலீஸ் ட்ரெய்னிங் சென்டர். எழுநூறு ஆண்கள் புதிதாக பயிற்சிக்கு சேர்க்கப் பட்டு பயிற்சி தொடங்கியது. பயிற்சி எப்படி இருக்குமோ, என்ன செய்வார்களோ என்ற பயம் அனைவர் முகத்திலும் தெரிந்தது. அனைவரும் பரேட் க்ரௌன்டுக்கு வரவழைக்கப் பட்டனர்.

“ஸ்க்வாஆஆட் அட்டேன்ஷன்“ என்ற குரல் கேட்டதும் வரிசையில் நின்று பூட்ஸ் காலை ஓங்கி தரையில் அடித்தனர்.


எம்.ஏ படிப்பை முடித்து, “காக் காசு வாங்குனாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும்“ என்ற அவன் அப்பாவின் பேச்சைக் கேட்டு எஸ்.ஐ தேர்வின் போது புழங்கிய லட்சங்களை எட்ட முடியாததால் காவலர் தேர்வில் கலந்து கொண்டு இன்று பெரேட் க்ரவுண்டில் அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்தான் குமரேசன்.

கவாத்துப் பயிற்சியும், உடல் பயிற்சிகளும் மிகக் கடினமாக இருந்தாலும், ட்ரெயினிங்கில் சேர்ந்த நண்பர்ளோடு சேர்ந்து இந்தப் பயிற்சியை குமரேசனால் எளிதாக முடிக்க முடிந்தது.
“நாளைளேர்ந்து எல்லாரும், ப்ராக்டிக்கல் ட்ரேயினிங் போகனும்.

அவங்கவங்களுக்கு அலாட் ஆன ஸ்டேஷன நோட்டீஸ் போர்டில பாத்துக்கங்க. “ “இன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் ரிலீவ் ஆகி, நாளைக்கு ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணணும். ப்ராக்டிக்கல் ட்ரேயினிங்ல பெயில் ஆனவங்க, சீனியாரிட்டிய லூஸ் பண்ணுவீங்க“ என்று இன்ஸ்ட்ரக்டர் சொன்ன போது, குமரேசனக்கு சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையே தோன்றியது.

விளாத்திக்குளம் ஸ்டேஷன் அலாட் ஆனது குமரேசனுக்கு.

“எத்தனை பேருப்பா நம்ப ஸ்டேஷனுக்க அலாட் ஆகியிருக்கீங்க ? “ என்று உரத்த குரலில் கேட்டவர் இன்ஸ்பெக்டர் என்று உணர முடிந்தது. “ரைட்டர் என்ன வேல சொல்ராரோ அதை செய்யிங்க. புரியிதா ? “ என்று கேட்டு விட்டு வெளியே கிளம்பிச் சென்று விட்டார். என்னுடன் ப்ராக்டிக்கல் ட்ரெய்னிங் வந்த மற்ற மூவரும் குமரேசனும், அமைதியாக ஸ்டேஷன் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.


“என்னப்பா ? பிசிக்கல் ட்ரேயினிங்கெல்லாம் முடிஞ்சுதா ? “ என்று கேட்ட ரைட்டர் என்று அழைக்கப் பட்டவர், பெரிதாக மீசை வைத்திருந்தார். யூனிபார்ம் வெளுத்த காக்கியில் இருந்தது. புரோட்டா கடையில் இரவு வியாபாரத்திற்காக மாலை நாலு மணியளவில் பிசைந்து வைக்கப் பட்டிருக்கும் மைதா மாவைப் போல இருந்தது அவர் வயிறு. “மச்சான், இவர் கால் கட்டை விரலைப் பார்த்து பத்து வருஷம் இருக்கும் போல“ என்று குமார் கூறியதற்கு, “கட்டை விரலை விடுடா…. “ என்று ரஞ்சித் கூறியபோது, பல்லைக் கடித்துக் கொண்டு “வாயை மூடுங்கடா“ என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினேன்.

இது எதுவும் அந்த ரைட்டரின் காதுக்கு விழுந்தது போலத் தெரியவில்லை. ஆனால் ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொள்கிறோம் என்று புரிந்து நிமிர்ந்து பார்த்தவர் “தம்பிங்களா… அந்த மரத்துக்கு கீழே போய் உக்காருங்க“ “நான் கூப்புடும்போது வந்தாப் போதும்“ என்று கூறி விட்டு ஸ்டேஷன் உள்ளே தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.


மறுநாளே வேலை வந்தது. பக்கத்துக் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்ததையடுத்து, ரெய்டுக்கு கிளம்பினார் இன்ஸ்பெக்டர். எங்கள் அனைவரையும், ஜீப்பின் பின்புறம் அமரச் சொன்னார். இரவு பதினோரு மணி இருக்கும். அந்த கிராமத்தை அடையும் முன்பே, ஜீப்பை நிறுத்தி விட்டு, நடந்து வரச் சொன்னார் இன்ஸ்பெக்டர். அவ்வாறே செய்தோம்.

ஒரு வீட்டின் முன்னே நின்றார் இன்ஸ்பெக்டர். அந்த வீட்டின் அருகே வேறு வீடுகள் இல்லை. அந்த ஊரே இன்னும் 200 மீட்டர் தாண்டித்தான் தொடங்கியது. தூரத்தில் தெரு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் கதவு மரத்தால் செய்யப் பட்டது போலத் தெரிந்தது. உள்ளே விளக்கு வெளிச்சம் ஏதும் தேரியவில்லை.


அந்த வீட்டின் முன் சென்று நின்ற இன்ஸ்பெக்டர், “டேய் ட்ரேய்னீஸ்ல ரெண்டு பேரு வீட்டுக்கு முன்னாடியும், ரெண்டு பேர் வீட்டுக்கு பின்னாடியும் போய் நில்லுங்க“ என்றார். எனக்கு வீட்டின் முன்னே நிற்கும் வாய்ப்பு வந்ததால் இன்ஸ்பெக்டர் பின்னால் நின்றேன்.

குடிசை வீடாக இருந்த அந்த வீட்டின் கதவை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வேகத்தில் கதவு திறந்து கொண்டது. இருட்டில் இருந்து வேகமாக ஒரு பெண் கூந்தலை அள்ளி முடித்தபடியே வந்தாள். “அய்யா, அவரு இல்லங்க“ என்று கூறி முடித்ததுமே பொளேரேன்று அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.




“ஏண்டி தேவிடியா… அந்தக் கண்டாரோளி மயன் ஊரு பூரா சாராயம் விப்பான்; நான் வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கணுமா”

“அய்யா அவரு இப்போல்லாம் சாராயம் விக்கரதில்லீங்க“

“தெரியுன்டீ அவன் என்ன பண்றான்னு“ “டேய் தம்பி, இவள ஜீப்புல ஏத்துடா “ என்று சொல்லியதும், “அய்யோ, ஆயிரம் ஆயிரமா இந்தக் கையால வாங்கினியே; வாங்கிட்டு இப்புடி என்னை அடிக்கிறியே, அந்தக் கையில புத்து வைக்க“ என்று அந்தப் பெண் கத்தியதைக் கண்டதும், குமரேசன் வயிற்றில் ஏதோ செய்தது.



உடனே, இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் அந்தப் பெண்ணை எட்டி உதைத்தார். அவள் ஐந்தடி தள்ளி பேச்சு மூச்சற்று கிடந்தாள். ஆனால் அதைப் பற்றி கவலையே படாத இன்ஸ்பெக்டர், “யோவ் ஏட்டு, வீட்டு உள்ள போய் என்ன இருக்குன்னு பாத்துட்டு வாய்யா“ என்றார். வீட்டினுள் சென்று, பத்து நிமிடம் கழித்து, “அய்யா கொஞ்சம் உள்ளே வாங்கய்யா“ என்ற ஏட்டின் குரல் கேட்டது.

சிறிது நேரம் கழித்து, ஏட்டும், இன்ஸ்பெக்டரும் வெளியே வந்தனர். அவர் பாக்கெட்டின் வெளியே ரூபாய் நோட்டுக்கள் நீட்டிக் கொண்டிருந்தது மங்கலான தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.


“எல்லாரும் வண்டில ஏறுங்கப்பா“ என்ற இன்ஸ்பெக்டரின் உத்தரவைக் கேட்ட உடனேயே, குமரேசனுக்கும், அவன் நண்பர்களுக்கும், மயங்கிக் கிடந்த அந்தப் பெண் பக்கம் பார்வை சென்றது. “என்னப்பா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க, அய்யா சொல்ராருல்ல… …. .. வண்டில ஏறு“ என்று ஏட்டு கூறியதைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் வண்டியில் ஏறினாலும் குமரேசனின் மனம் அந்தப் பெண்ணைப் பற்றியே சிந்தித்து வந்தது.

ஸ்டேஷன் வரும் வரையில் நண்பர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை.
ஸ்டேஷன் வந்ததும் குமரேசனும் அவன் நண்பர்களும் ஸ்டேஷன் வெராந்தாவில் உட்கார்ந்து கொள்ள, ஏட்டு, இன்ஸ்பெக்டர் ரூமுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.


இவர்கள் நாலு பேரையும் ஸ்டேஷனுக்குள் அழைத்த ஏட்டையா, ஒவ்வொருவர் கையிலும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திணித்து, ரெஸ்ட் ரூமுக்குச் செல்லலாம் என்று கூறினார்.


தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த குமரேசனுக்கு, அது கவர்மென்ட் காசா என்பது தெரியவில்லை.




சவுக்கு