Monday, March 15, 2010

காவல் கதைகள்.


காவல் கதைகள் என்று தொடர் சிறுகதைகள் எழுதலாம் என்று உத்தேசித்துள்ளேன்.

காதல் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இது என்ன புதிதாக காவல் கதைகள் ?

தமிழ்நாடு காவல்துறையில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் இந்தக் கதைகள் வெளியே வருவதேயில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் அனைவரையும் எதிரியாகவே பார்ப்பதாலா, அல்லது காவல்துறையினரோடு, உள்ளன்போடு யாரும் பழகாததாலா என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.


ஆனாலும் இந்தக் கதைகள் எழுத தூண்டவே செய்கின்றன. என் பாதையில் குறுக்கிட்ட பாத்திரங்களை உங்கள் முன் படைக்கிறேன்.

இனி முதல் கதை.

கவர்மெண்ட் காசு

ணிமுத்தாறு போலீஸ் ட்ரெய்னிங் சென்டர். எழுநூறு ஆண்கள் புதிதாக பயிற்சிக்கு சேர்க்கப் பட்டு பயிற்சி தொடங்கியது. பயிற்சி எப்படி இருக்குமோ, என்ன செய்வார்களோ என்ற பயம் அனைவர் முகத்திலும் தெரிந்தது. அனைவரும் பரேட் க்ரௌன்டுக்கு வரவழைக்கப் பட்டனர்.

“ஸ்க்வாஆஆட் அட்டேன்ஷன்“ என்ற குரல் கேட்டதும் வரிசையில் நின்று பூட்ஸ் காலை ஓங்கி தரையில் அடித்தனர்.


எம்.ஏ படிப்பை முடித்து, “காக் காசு வாங்குனாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும்“ என்ற அவன் அப்பாவின் பேச்சைக் கேட்டு எஸ்.ஐ தேர்வின் போது புழங்கிய லட்சங்களை எட்ட முடியாததால் காவலர் தேர்வில் கலந்து கொண்டு இன்று பெரேட் க்ரவுண்டில் அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்தான் குமரேசன்.

கவாத்துப் பயிற்சியும், உடல் பயிற்சிகளும் மிகக் கடினமாக இருந்தாலும், ட்ரெயினிங்கில் சேர்ந்த நண்பர்ளோடு சேர்ந்து இந்தப் பயிற்சியை குமரேசனால் எளிதாக முடிக்க முடிந்தது.
“நாளைளேர்ந்து எல்லாரும், ப்ராக்டிக்கல் ட்ரேயினிங் போகனும்.

அவங்கவங்களுக்கு அலாட் ஆன ஸ்டேஷன நோட்டீஸ் போர்டில பாத்துக்கங்க. “ “இன்னைக்கு ஈவ்னிங் எல்லாரும் ரிலீவ் ஆகி, நாளைக்கு ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணணும். ப்ராக்டிக்கல் ட்ரேயினிங்ல பெயில் ஆனவங்க, சீனியாரிட்டிய லூஸ் பண்ணுவீங்க“ என்று இன்ஸ்ட்ரக்டர் சொன்ன போது, குமரேசனக்கு சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையே தோன்றியது.

விளாத்திக்குளம் ஸ்டேஷன் அலாட் ஆனது குமரேசனுக்கு.

“எத்தனை பேருப்பா நம்ப ஸ்டேஷனுக்க அலாட் ஆகியிருக்கீங்க ? “ என்று உரத்த குரலில் கேட்டவர் இன்ஸ்பெக்டர் என்று உணர முடிந்தது. “ரைட்டர் என்ன வேல சொல்ராரோ அதை செய்யிங்க. புரியிதா ? “ என்று கேட்டு விட்டு வெளியே கிளம்பிச் சென்று விட்டார். என்னுடன் ப்ராக்டிக்கல் ட்ரெய்னிங் வந்த மற்ற மூவரும் குமரேசனும், அமைதியாக ஸ்டேஷன் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.


“என்னப்பா ? பிசிக்கல் ட்ரேயினிங்கெல்லாம் முடிஞ்சுதா ? “ என்று கேட்ட ரைட்டர் என்று அழைக்கப் பட்டவர், பெரிதாக மீசை வைத்திருந்தார். யூனிபார்ம் வெளுத்த காக்கியில் இருந்தது. புரோட்டா கடையில் இரவு வியாபாரத்திற்காக மாலை நாலு மணியளவில் பிசைந்து வைக்கப் பட்டிருக்கும் மைதா மாவைப் போல இருந்தது அவர் வயிறு. “மச்சான், இவர் கால் கட்டை விரலைப் பார்த்து பத்து வருஷம் இருக்கும் போல“ என்று குமார் கூறியதற்கு, “கட்டை விரலை விடுடா…. “ என்று ரஞ்சித் கூறியபோது, பல்லைக் கடித்துக் கொண்டு “வாயை மூடுங்கடா“ என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினேன்.

இது எதுவும் அந்த ரைட்டரின் காதுக்கு விழுந்தது போலத் தெரியவில்லை. ஆனால் ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொள்கிறோம் என்று புரிந்து நிமிர்ந்து பார்த்தவர் “தம்பிங்களா… அந்த மரத்துக்கு கீழே போய் உக்காருங்க“ “நான் கூப்புடும்போது வந்தாப் போதும்“ என்று கூறி விட்டு ஸ்டேஷன் உள்ளே தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.


மறுநாளே வேலை வந்தது. பக்கத்துக் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் வந்ததையடுத்து, ரெய்டுக்கு கிளம்பினார் இன்ஸ்பெக்டர். எங்கள் அனைவரையும், ஜீப்பின் பின்புறம் அமரச் சொன்னார். இரவு பதினோரு மணி இருக்கும். அந்த கிராமத்தை அடையும் முன்பே, ஜீப்பை நிறுத்தி விட்டு, நடந்து வரச் சொன்னார் இன்ஸ்பெக்டர். அவ்வாறே செய்தோம்.

ஒரு வீட்டின் முன்னே நின்றார் இன்ஸ்பெக்டர். அந்த வீட்டின் அருகே வேறு வீடுகள் இல்லை. அந்த ஊரே இன்னும் 200 மீட்டர் தாண்டித்தான் தொடங்கியது. தூரத்தில் தெரு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் கதவு மரத்தால் செய்யப் பட்டது போலத் தெரிந்தது. உள்ளே விளக்கு வெளிச்சம் ஏதும் தேரியவில்லை.


அந்த வீட்டின் முன் சென்று நின்ற இன்ஸ்பெக்டர், “டேய் ட்ரேய்னீஸ்ல ரெண்டு பேரு வீட்டுக்கு முன்னாடியும், ரெண்டு பேர் வீட்டுக்கு பின்னாடியும் போய் நில்லுங்க“ என்றார். எனக்கு வீட்டின் முன்னே நிற்கும் வாய்ப்பு வந்ததால் இன்ஸ்பெக்டர் பின்னால் நின்றேன்.

குடிசை வீடாக இருந்த அந்த வீட்டின் கதவை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்த வேகத்தில் கதவு திறந்து கொண்டது. இருட்டில் இருந்து வேகமாக ஒரு பெண் கூந்தலை அள்ளி முடித்தபடியே வந்தாள். “அய்யா, அவரு இல்லங்க“ என்று கூறி முடித்ததுமே பொளேரேன்று அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார் இன்ஸ்பெக்டர்.




“ஏண்டி தேவிடியா… அந்தக் கண்டாரோளி மயன் ஊரு பூரா சாராயம் விப்பான்; நான் வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கணுமா”

“அய்யா அவரு இப்போல்லாம் சாராயம் விக்கரதில்லீங்க“

“தெரியுன்டீ அவன் என்ன பண்றான்னு“ “டேய் தம்பி, இவள ஜீப்புல ஏத்துடா “ என்று சொல்லியதும், “அய்யோ, ஆயிரம் ஆயிரமா இந்தக் கையால வாங்கினியே; வாங்கிட்டு இப்புடி என்னை அடிக்கிறியே, அந்தக் கையில புத்து வைக்க“ என்று அந்தப் பெண் கத்தியதைக் கண்டதும், குமரேசன் வயிற்றில் ஏதோ செய்தது.



உடனே, இன்ஸ்பெக்டர் பூட்ஸ் காலால் அந்தப் பெண்ணை எட்டி உதைத்தார். அவள் ஐந்தடி தள்ளி பேச்சு மூச்சற்று கிடந்தாள். ஆனால் அதைப் பற்றி கவலையே படாத இன்ஸ்பெக்டர், “யோவ் ஏட்டு, வீட்டு உள்ள போய் என்ன இருக்குன்னு பாத்துட்டு வாய்யா“ என்றார். வீட்டினுள் சென்று, பத்து நிமிடம் கழித்து, “அய்யா கொஞ்சம் உள்ளே வாங்கய்யா“ என்ற ஏட்டின் குரல் கேட்டது.

சிறிது நேரம் கழித்து, ஏட்டும், இன்ஸ்பெக்டரும் வெளியே வந்தனர். அவர் பாக்கெட்டின் வெளியே ரூபாய் நோட்டுக்கள் நீட்டிக் கொண்டிருந்தது மங்கலான தெரு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது.


“எல்லாரும் வண்டில ஏறுங்கப்பா“ என்ற இன்ஸ்பெக்டரின் உத்தரவைக் கேட்ட உடனேயே, குமரேசனுக்கும், அவன் நண்பர்களுக்கும், மயங்கிக் கிடந்த அந்தப் பெண் பக்கம் பார்வை சென்றது. “என்னப்பா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க, அய்யா சொல்ராருல்ல… …. .. வண்டில ஏறு“ என்று ஏட்டு கூறியதைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் வண்டியில் ஏறினாலும் குமரேசனின் மனம் அந்தப் பெண்ணைப் பற்றியே சிந்தித்து வந்தது.

ஸ்டேஷன் வரும் வரையில் நண்பர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை.
ஸ்டேஷன் வந்ததும் குமரேசனும் அவன் நண்பர்களும் ஸ்டேஷன் வெராந்தாவில் உட்கார்ந்து கொள்ள, ஏட்டு, இன்ஸ்பெக்டர் ரூமுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.


இவர்கள் நாலு பேரையும் ஸ்டேஷனுக்குள் அழைத்த ஏட்டையா, ஒவ்வொருவர் கையிலும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை திணித்து, ரெஸ்ட் ரூமுக்குச் செல்லலாம் என்று கூறினார்.


தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த குமரேசனுக்கு, அது கவர்மென்ட் காசா என்பது தெரியவில்லை.




சவுக்கு

9 comments:

மதுரை சரவணன் said...

நல்லப் பதிவு. காவல் கதைகள் அருமை. நண்பரே..என் கல்வி கதைகளையும் படித்து கருத்திடுங்கள். வாழ்த்துக்கள்.

Sundararajan P said...

நல்ல முயற்சி. மக்கள் நேய படைப்புகள் மலரட்டும். சமூகத்தில் விழிப்புணர்வு பரவட்டும்.

யாத்ரீகன் said...

அதிகம் கேள்விப்பட்டிராத களத்தை தொட்டிருக்கீங்க.. தொடருங்க .. நல்லாருக்கு..

ஜிஎஸ்ஆர் said...

நண்பா யாரும் அதிகம் எழுத யோசிக்கும் கதைக்களம் அழகாக சொல்ல வந்ததை நெத்தியடியாக சொல்லியிருக்கிறீர்கள்
(நண்பா வேர்ட் வெர்ப்பிகேசனை எடுத்து விடுங்களேன்)

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

சவுக்கு said...

வேர்ட் வெரிபிக்கேஷன் எடுக்கப் பட்டது நண்பர் ஜிஎஸ்ஆர் அவர்களே.

சவுக்கு said...

கருத்து அளித்த நண்பர், சுந்தர்ராஜன், யாத்ரீகன், மதுரை சரவணன் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

aazhimazhai said...

tholaree nalla kathai matrum nalla muyarchi.... thodarungal ....

ரோஸ்விக் said...

கைகுலுக்குகிறேன் உங்கள் பகிர்விற்கு. காது கொடுக்கிறேன் உங்கள் கதைகளுக்கு... :-)

Anonymous said...

அருமையான பதிவு நண்பரே ...

Post a Comment

அன்போடு கருத்திட்டு என்னை ஊக்கப் படுத்துங்கள்.