Monday, March 22, 2010

காவல் கதைகள் 3 காயத்ரி

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, காவல்துறையின் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டென்டாக பணியில் சேர்ந்த போது அவள் அறிந்திருக்கவில்லை, இந்த அலுவலகம், தனது வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறதென்று.

ச்சாரமான பிராமணக் குடும்பம். ஐந்தாவது பெண்ணாக பிறந்தாள் காயத்ரி. அவளின் தோப்பனார் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கெழுதும் வேலை செய்து ஐந்து பெண்கள் கொண்ட தனது குடும்பத்தை நன்றாகவே காப்பாற்றி வந்தார். புதுத் துணி என்றால் தீபாவளிக்கு மட்டும் தான். ஐந்து பெண்களை கரை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து குடும்பத்தை சிக்கனமாகவே நடத்தி வந்தார் சீனிவாசய்யர். ‘கௌசி மாமி என்று அழைக்கப் படும் கௌசல்யாவும் சீனிவாசய்யரின் பொறுப்புக்கு சற்றும் குறையாமலே குடும்பத்தை நடத்தி வந்தாள். மைலாப்பூரில் கீழ் நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில்தான் வீடு. வீட்டு ஓனரும் பிராமணராதலால், இவர்கள் கொடுக்கும் சொற்ப வாடகைக்கு இந்த வீட்டை இவர்களுக்கு குடக்கூலிக்கு விட்டிருந்தார்.
ப்பா, காலேஜுல எல்லாம் டூர் போறாப்பா. வெறும் நூறு ரூபாத்தான் பா. நான் போகலேன்னா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பரிகாசம் பண்ணுவாப்பா““நூறு ரூபா ஒண்ணும் சின்ன அமவுண்ட் இல்லேடீ. பரிகாசம் பண்றவா தோப்பனாரெல்லாம் நன்னா சம்பாதிப்பா. நேக்கு அப்படி வருமானம் இல்லையேடீ. அடுத்த முறை போலாம்“ என்ற அப்பாவின் பதிலுக்கு காயத்ரி வேறு என்ன சொல்லி விட முடியும் ? ஆனால் வாழ்வின் உன்னதங்கள் பலவற்றை அனுபவிக்காத ஏக்கம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.

ல்லூரிப் படிப்பு முடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷம் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தொற்றிக் கொண்டது.

டிப்பில் சூட்டிகையான காயத்ரி, பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே துறைத் தேர்வுகள் அனைத்தையும் எழுதி, தேர்ச்சி பெற்று, அடுத்த பதவி உயர்வை பெற்றாள். நன்றாக வேலை செய்வாள் என்ற பெயரை விரைவாகவே பெற்றாள் காயத்ரி. அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் காயத்ரியை, மடியில் வைத்துக் கொஞ்சாதது மட்டும் தான் பாக்கி. “காயத்ரிக்கென்ன ? எந்த வேலையக் கொடுத்தாலும், டாண் டாண்ணு முடிச்சுடுவோ“ என்ற பாராட்டுரைகள் காயத்ரியை மயக்கவே செய்தன. இருபத்து மூன்று வயதில், தாவணி அணிந்த அந்த இளம் பெண்ணைச் சுற்றி மொய்த்த கண்களுக்கு வயதே இல்லை.

வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளுக்குள் காயத்ரிக்கு நல்ல வரனாக பார்க்கும் வேலையை தொடங்கிய சீனிவாசய்யர், காயத்ரியைப் போலவே, மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றும், வெங்கட்ராமனை மணம் முடித்தார். வெங்கட்ராமன் வெளி உலகம் தெரியாமல், அடுக்களையைச் சுற்றியே தன் வாழ்க்கையை வளர்த்தவன்.

ன்னா. நாளைக்கு நோக்கு லீவுதானே. வர்றேளா. சினிமாவுக்கு போயிட்டு வரலாம். மாமிக்கிட்ட வேணா நான் கேக்கறேன். “
“அம்மா ரொம்ப ஆச்சாரமானவா டீ. நீ இப்படி போய் சினிமா ட்ராமாக்குப் போகணுன்னு கேட்டா, நம்மாத்து மாட்டுப் பொண்ணு இப்பிடி திமிர் பிடிச்சவளா இருக்காளேன்னுடுவா“ “கோயிலுக்கு வேணா போலாம்“ திருமணமாகி மூன்று மாதங்களில் முன்னூறு தடவை அந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கூட்டிச் சென்றிருப்பான் வெங்கட்ராமன். இவளும் மயிலாப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவள்தானே, இந்த கபாலீஸ்வரர் கோயிலை எத்தனை முறை இவள் பார்த்திருப்பாள் என்ற நினைவே வெங்கட்ராமனுக்கு வரவில்லை.

டுத்த மூன்று ஆண்டுகளில் நடந்த விபத்துக்களில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே, காயத்ரியின் அழகை வரித்துக் கொண்டிருந்தன. குழந்தைகள் காயத்ரியின் அழகை வரித்துக் கொண்டிருந்தாலும், காயத்ரியின் மெருகு குறைந்து விடுமா என்ன ?

னால் மூன்று ஆண்டுகளில் வெங்கட்ராமன் காரணம் எதுவுமே இல்லாமல் காயத்ரியிடமிருந்து விலகிப் போனான். இத்தனை அகலமான கட்டிலை ஏன் செய்தார்கள் என்று காயத்ரி பல முறை வருத்தப் பட்டிருக்கிறாள். கட்டில் சிறிதாக இருந்தாலும், கட்டியவன் சரியாக இருக்க வேண்டுமல்லவா ?
“ஏன்னா“

“ம்“

“ஏன்னா“

“என்னடீ ? “

“நான் நன்னாருக்கேனா ? “‘

“தூங்கிண்டிருக்கவாள எழுப்பிக் கேக்கற கேள்வியாடீ இது ? “

“என் கிட்ட வாங்கோளேன். “
“நாளைக்கி ஆபீஸ்ல ஆடிட் இருக்குடீ. தொந்தரவு பண்ணாமே தூங்கு“
நாளைக்குத்தான் ஆடிட். இத்தனை நாள் என்ன ? என்ற கேள்வி, உடல் வெப்பத்தோடு, அடங்கியது. கண்ணோரம் வழிந்த கண்ணீரை தலையணையில் துடைத்து விட்டு உறங்கினாள்.

மே“டம், நாளைக்கு புது எஸ்.பி ஜாயின் பண்றார்.“ என்று எஸ்பியின் வெயிட்டிங் பிசி வந்து சொன்னான்.
“நாளைக்குத் தானே பண்றார். இப்போ என்ன வேலை செய்ய விடுங்கோ“ என்ற பதிலளித்து விட்டு, அன்றைக்கு முடிக்க வேண்டிய பில்களை தயாரிக்கத் தொடங்கினாள்.

ஆம் ந்யூ டு திஸ் ப்ளேஸ்“ என்று தன்னை சந்திக்க வந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புதிய ஐபிஎஸ் அதிகாரி இளமையாகவே இருந்தான். நல்ல உயரம். அந்த யூனிபார்ம் கச்சிதமாக அவனுக்குப் பொருந்தியிருந்தது.

“ஐ வான்ட் யூ ஆல் டு கிவ் யுவர் கோஆப்பரேஷன்“ என்று அவன் பேசி முடித்து அமர்ந்த போது, இந்த அதிகாரி தமிழன்தானே…. …. எதற்கு எல்லா அதிகாரிகளும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று எழுந்த கேள்விக்கு, அது சரி. ஆங்கிலத்தில் பேசினால்தானே அவன் அதிகாரி என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் காயத்ரி. ஆனாலும் ஆள் நன்னாத்தான் இருக்கான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சீட்டுக்கு போனாள்.

பிறகு அந்த அலுவலகத்தில் முக்கியமான சீட் பார்த்து வந்ததால், அடிக்கடி அந்த அதிகாரியின் அறைக்கு செல்ல வேண்டி வந்தது.காயத்ரி. நல்லா வொர்க் பண்றீங்க. கவர்மெண்ட் ஆஃபீஸ்ல மத்த ஸ்டாப் மாதிரி நீங்க இல்ல. யு ஆர் ரியல்லி, வெரி குட்“ என்று அவன் சொல்லியபோது, அவளையறியாமல் உடல் சிலிர்த்தது.

“ஹவ் மெனி சில்ட்ரென் யூ ஹேவ் ? “

“டூ டாட்டர்ஸ் சார்“

“வாஆஆவ். யூ டோன்ட் லுக் லைக் தட்“ “ஐ வில் சே யு ஆர் நைன்டீன்“. ஹவ் ஓல்ட் ஆர் யு“ என்று அவன் கேட்டதற்கு, “ஐம் ட்வெண்டி நைன் சார்“ என்று குழைந்து அவள் சொன்ன பதிலில் அவளின் சம்மதம் இருந்ததாக உணர்ந்தான்.

வாசலில் இருக்கும் கான்ஸ்டபிளை அழைக்கும் அழைப்பு மணியை அழுத்தினான்.

“அய்யா“

“ராமனாதன். மேடம் கூட, ஒரு முக்கியமான பைல் டிஸ்கஷன் இருக்கு. நோ விசிட்டர்ஸ் அன்ட் நோ கால்ஸ். புரியுதா ? “ என்று அவன் கேட்டதற்கு கான்ஸ்டபிள், “நல்லதுங்கய்யா“ என்று தமிழில்தான் பதிலளித்தான். அவன் அதிகாரி அல்லவே ?

ரம்பத்தில் பரபரப்பாக இருந்த காயத்ரியும், அந்த அதிகாரியும் நெருக்கம் என்ற வதந்தி, இரண்டு ஆண்டுகளில், பழகிப் போன பழைய செய்தியானது மட்டுமல்ல, அந்த அதிகாரியிடம் காரியம் ஆக வேண்டும் என்பவர்கள் காயத்ரியை அணுகுவதும் வாடிக்கையாகிப் போனது.
அவன் மாறுதலில் சென்ற போது காயத்ரிக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கு அளவே இல்லை. இத்தோடு நம்மை மறந்து விடுவான் என்றுதான் நினைத்திருந்தாள்.

னால், ஒரு மாதம் கழித்து, சிவப்பு விளக்கை தலையில் சுழல விட்டபடி, ஒய்யாரமாக ஒரு கார் அலுவலகத்தில் வந்து நின்றதும், அந்த கார் காயத்ரியை ஏற்றிக் கொண்டு அவனின் புதிய அலுவலகத்துக்குச் சென்றதும், அவனின் புதிய அலுவலகத்தில் காயத்ரியின் மரியாதையை பல மடங்கு கூட்டியது. “அய்யாவோட கார்லே வர்றாங்கன்னா, அய்யாவுக்கு நெருக்கமாத்தான் இருக்கணும்“ என்று ஊகித்துக் கொண்டு, எதற்கும் இருக்கட்டும் என்று அய்யாவின் ட்ரைவரிடம் இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி என எல்லோரும் விசாரித்தார்கள். நெருக்கம் இல்லை என்று சொன்னால், எவனும் மதிக்க மாட்டான் என்பதை உணர்ந்த ட்ரைவர், ரொம்ப நெருக்கம் என்று சொல்லி வைத்தான்.

காயத்ரி, நான் உங்க வீட்டுக்கு வர்றேன். எப்போ கூட்டிட்டுப் போற“

“எங்க ஆத்துக்கெல்லாம் நீங்க வருவேளா… … பெரிய ஆபீசர் நீங்க… நான் என்ன உங்கள மாதிரி ஆபீசரா ? “

“ஆபிசரையே மடக்கிப் போட்ட நீ என்னை விட பெரிய ஆபீசர் இல்லையா “ என்று கேட்டு விட்டு “ஹாஹ்ஹா“ என்று தனது ஹேஷ்யத்தை தானே ரசித்தான். “நீங்க வர்றேள்னு சொன்னா இப்போவே கூட்டிட்டுப் போறேன். “

“ஏன்னா. நம்ப ஆத்துக்கு யார் வந்துருக்கா பாருங்கோ“ என்று அவனை அமரச் சொல்லி விட்டு, வெங்கட்ராமனை அழைத்ததும், வெங்கட்ராமன் கண்களில் வியப்புத் தெரிந்தது.

“சார். இதுதான் என் ஹஸ்பென்ட். வெங்கட்ராமன். “ என்று அவனை அறிமுகப்படுத்தியபோது, நின்ற இடத்திலிருந்தே கையை மட்டும் எக்கி நீட்டினான். கிட்டே சென்று கை கொடுத்தால் மரியாதைக் குறைவு என்று வெங்கட்ராமனுக்கு யார் சொன்னது ?

“ஓ.. வெரி நைஸ் டு மீட் யு. யூ ஆர் வெரி லக்கி டு ஹேவ் சச் ய ப்யூட்டிபுல் வைப் “ என்று அவன் சொன்னபோது, காயத்ரியை விட, வெங்கட்ராமனின் வெட்கம் அதிகமாக இருந்தது. “காக்கி உடுப்பு போட்ருக்க இவ்ளோ பெரிய அதிகாரி, நம்ம ஒய்ப் அழகா இருக்கான்னு சொன்னா, எவ்ளோ பாக்கியம் “ என்று மனதிற்குள், நினைத்துக் கொண்டு, “செத்த இருங்கோ. நன்னா பில்டர் காப்பி போட்டு எடுத்துண்டு வர்றேன். காப்பி சாப்பிடுவேளோன்னோ “ என்று கேட்டு விட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல் கிச்சனுக்குள் சென்றான்.

இதற்குள் அந்த ஃப்ளாட்டில் இருந்த பக்கத்து வீட்டுக் காரர்கள் அனைவரும், வாசலில் கூடினர். “மாமீ…. மாமீ….“ என்ற குரல் கேட்டு, கதவைத் திறந்த காயத்ரிக்கு, நான்கைந்து பக்கத்து வீட்டுக் காரர்கள் வாசலில் நிற்பதைப் பார்த்ததும் என்னவாக இருக்கும் என்று சந்தேகத்தோடே கதவைத் திறந்தாள். “மாமீ. உங்க ஆத்துக்கு பெரிய ஆபீசர் வந்துருக்காளாமே… நாங்களும் செத்த பாத்துட்டு போயிடுறோமே… “ என்று அவர்கள் கேட்டதும், காயத்ரிக்கு வந்த பெருமை விவரிக்க முடியாதது.

“உள்ளே வாங்கோ“ என்று அவர்களை அழைத்து அவனிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.
புதிதாக செல்போன் அறிமுகமானபோது, காயத்ரிக்கு செல்போன் ஒன்றை பரிசளித்தான். “நீ எப்பவும் என் கூடவே இருக்கனும்“ என்று அவன் கூறியது, அந்த வயதிலும் பூரிப்பை ஏற்படுத்தியது.
கால ஓட்டத்தில், தமிழ் நாடு முழுக்க, அந்த அதிகாரி பைலில் கையெழுத்துப் போட வேண்டும் என்றால் காயத்ரியின் கண்ணசைவு வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது. காவல்துறையில் சேவையை விட தேவைகள்தானே அதிகம். தேவைகள் அதிகமானவர்கள், தங்கள் தேவைக்காக, காயத்ரியை பார்க்க வரும் முன், நகைக்கடைக்கு சென்று வருவதும், அவர்களிடம், “பிரின்ஸ் ஜுவல்லரில்ல புது டிசைன் வந்திருக்காமே“ என்று இவள் கேட்பதும் இயல்பான விஷயமாகிப் போனது.

மீண்டும் அவன் அவள் பணியாற்றும் அலுவலகத்துக்கே மாறுதலில் வந்த போது, காயத்ரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “இனிமே நான்தான் டிஜிபி“ என்று வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தாள்.

டிஜிபி எங்க வீட்டுக்கு நேத்து வந்தார் என்று அலுவலகத்தில் சொல்லிக் கொண்டால், தன்னுடைய மதிப்பு கூடும் என்று காயத்ரிக்கு யார் சொல்லிக் கொடுத்தது ?

“ஆத்துக்கு வந்து ரொம்ப நாளாச்சே. இன்னைக்கு வர்றேளா ? “

“ ஈவ்னிங் ஹோம் செக்ரட்டரியப் பாக்கணும். ஓக்கே. டு ஹெல் வித் இட். ஐ வில் டெல் ஹர் தட் ஐ வில் கம் டுமாரோ“ ஐ வில் கம்“ என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இதை நாளை அலுவலகத்தில் வந்து அனைவருக்கும் எப்படி விவரிப்பது என்று அவள் கற்பனை ஓடியது.

வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்து, அவனை உள்ளே அனுப்பி விட்டு, இவளாகவே, வலியச் சென்று, எதிர் வீட்டு கதவை தட்டி, “மாமீ. எங்க ஆத்துக்கு டிஜிபி வந்திருக்கார். செத்த நேரம் கழிச்ச வாங்கோ. நான் அவருக்கு காபி கொடுத்துட்றேன். “ என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, அவள் மூத்த மகள், டைட்டாக டீ ஷர்ட் அணிந்து கொண்டு, வெளியே புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பது தெரிந்தது.

“ஏய். கம் ஹியர். டிஜிபி வந்திருக்கார் பாரு“ என்று சொல்லியதை, அலட்சியமாக கேட்டவாறே அருகில் வந்தாள் அவள் மகள் சுபா.

ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அவள் மகளைப் பார்க்கிறான்.
“மம்மி. ஷாப்பிங் போறேன். டின்னர் வெளியே சாப்டுர்றேன். டோன்ட் வெயிட் ஃபார் மி“ என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, எதேச்சையாக அவனைத் திரும்பிப் பார்த்தவள், தன் மகள் மார்பை முறைத்துப் பார்த்தக் கொண்டிருப்பதை கண்டாள்.

மகள் வெளியே சென்றவுடன் அவன் சொன்னான். “யுவர் டாட்டர் ஈஸ் வெரி ப்யூட்டிஃபுல்“


சவுக்கு

6 comments:

ஜிஎஸ்ஆர் said...

நண்பா நல்லா இருக்கு இதெல்லாம் வெறும் கதையா இல்லை எங்காவது நடந்த உண்மையா?

சவுக்கு said...

அன்பு நண்பர் ஜிஎஸ்ஆர் அவர்களே, இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும். தொடர்ந்து படித்து ஆதரவு தரும் உங்களுக்கு என் நன்றி என்றென்றும் உரியது.

Dr. Srjith. said...

நல்ல முயற்சி

Anonymous said...

nice story...expected ending...eventhough it is good...

ரோஸ்விக் said...

//அடுத்த மூன்று ஆண்டுகளில் நடந்த விபத்துக்களில், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.//

kalakkal... :-)
athil purinthuvittathu ellaam.

Anonymous said...

a third rated story .. suitable to publish in yellow magazine. every non-sense in happening in our society, why ru publishing from your end.
It shows your mark...

Post a Comment

அன்போடு கருத்திட்டு என்னை ஊக்கப் படுத்துங்கள்.